இலங்கை – இந்திய உறவு நிரந்தரமாக பாதிக்கும் சாத்தியம்

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை நிரந்தரமாக பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தீர்வுத் திட்டமான 13ம் அரசியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தி வருகிறார்.

எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது, இந்திய அரசாங்கத்தை அதிர்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனை அண்மையில் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த போது, பிரதமர் மன்மோகன் சிங் சீர் செய்ய முற்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை என்று த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பரிந்துரையை நிராகரிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றமையானது, இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தி இருப்பதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply