13வது அரசியல் சட்டத் திருத்தம் தடையாக இருக்குமாயின் ரத்து குறித்து பேச்சு
இலங்கையின் வட மாகாணத்தில் சமுர்த்தி திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கும், திவிநெகும சட்டத்துக்கும் என்பனவற்றுக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தடையாக இருக்கும் என்று கருதப்பட்டால், அதை ரத்து செய்ய இலங்கை அரசு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆராயும் என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் சில தமிழ் ஊடகவியலாளர்களிடையே பேசிய பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் சீனாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு தவறானது, பொறுப்பற்றது என்று நிராகரித்தார்.
இலங்கைக்கு சர்வதேச உதவி கிடைப்பதை ததேகூ எதிர்க்கிறது என்று பசில் ராஜபக்ஷ கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் இரா.சம்பந்தர்.
தாங்கள் இந்திய மற்றும் சீன ராஜிய அலுவலர்களை சந்தித்தபோது, இலங்கைக்குப் பொருளாதர உதவிகள் வழங்க வேண்டாம் என்று கோரவில்லை என்றும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்தே பேசினோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
13வது அரசியல் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கூறப்படுவது பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், இது குறித்து அரசு உறுதியான முடிவெடுக்கும் நிலையில் தனது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply