அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் யார்? முந்துகிறார் சூசன் ரைஸ்

அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஒபாமா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போட்டியில் தற்போதைய ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் முந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன், 2வது முறையாக அப்பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது தனது குடும்பத்துடனருடன் நேரத்தை கழிக்க விரும்புவதால், மீண்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதிபருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கருதப்படுகிறது. ஹிலாரியுடன், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டா, கருவூலத்துறை அமைச்சர் டிம் கெய்த்னர் ஆகியோரும் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதே போல், வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்களைச் செய்ய ஒபாமா விரும்புவதாக தெரிகிறது. குறிப்பாக சில மூத்த அதிகாரிகளை நிர்வாகத்தின் பல்வேறு பதவிகளுக்கு மாற்றம் செய்ய ஒபாமா முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை இரண்டாம் முறையாக வகிக்க ஹிலாரி தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் அவரது பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தற்போது ஒபாமா ஆராய்ந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதரும், ஒபாமாவின் நெருங்கிய உதவியாளருமான சூசன் ரைஸ் முக்கியமானவராக கருதப்படுகிறது. இதே போல், அமெரிக்க வெளிவிவகாரத்துறை கமிட்டி சேர்மன் ஜான் கெர்ரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார். எனினும், சூசன் ரைசே இப்போட்டியில் வெல்வார் என கூறப்படுகிறது.

சூசன் ரைஸ் புதிய வெளியுறவுத்துறை செயலராக பதவியேற்கும்பட்சத்தில், அப்பதவி வகிக்கும் இரண்டாவது ஆப்ரிக்க பெண்மணி என்ற பெயரை பெறுவார். அதே நேரம், சிரியா உள்ளிட்ட விவகாரங்களில் சூசன் ரைசின் நடவடிக்கையால் எரிச்சலடைந்துள்ள ரஷ்யா. ரைஸ் நியமனத்தை பெரிதாக ரசிக்காது என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சூசன் ரைஸ் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், வாஷிங்டனுடன் இணைந்து செயல்படுவது என்பது ரஷ்யாவுக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply