பிபிசி தலைமை இயக்குநர் பதவி விலகல்; “நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை”

பிரிட்டனின் முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவர் மீது தவறுதலாக சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை சுமத்திய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பொறுப்பேற்று பிபிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜார்ஜ் எண்ட்விஸ்ல் பதவி விலகியுள்ள நிலையில், பிபிசி நிறுவனத்தின் கட்டமைப்பிலும் நிர்வாகத்திலும் பெரும் மாற்றங்கள் தேவை என்று பிபிசி அறக்கட்டளையின் தலைவர் பேட்டன் பிரபு கூறியுள்ளார்.

பிபிசி நிறுவனம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் காப்பாற்றுகிற தனது பங்கை தொடர்ந்து ஆற்றவே தான் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எண்ட்விஸ்லுக்கு மாற்றாக புதிய தலைமை இயக்குநர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பெயர் குறிப்பிடப்படாத கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவர் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டும் புலனாய்வு செய்திக்குறிப்பு அண்மையில் நியூஸ்நைட் செய்தி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.

இந்த செய்தி தவறானது என்றும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டிருக்கக்கூடாது என்றும் ஒப்புக்கொண்டிருந்த எண்ட்விஸ்ல், ஞாயிறு இரவு பதவி விலகியிருந்தார்.

இந்த செய்தி ஒளிபரப்பானது பற்றி விசாரணைகள் துவங்கப்பட்டுள்ளன.

பிபிசியின் முன்னாள் நட்சத்திர ஒளிபரப்பாளர் ஜிம்மி சவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் பல ஆண்டு காலம் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே விசாரணைகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply