13 ஒழிப்புத் திட்டத்தின் பின்னால் இந்திய அரசு; சந்தேகம் எழுப்புகிறார் சரவணபவன் எம்.பி.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்கும் அமைச்சர்கள் சிலரின் முயற்சிகளுக்குப் பின்னால் இந்திய மத்திய அரசும் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
“அரசமைப்பின் 13ஆவது திருத்தம் இந்திய அரசின் அழுத்தத்தாலேயே கொண்டு வரப்பட்டது. அதனை நீக்கிவிடுவதற்கு தற்போது கடும்போக்கு அமைச்சர்களான விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினை பற்றி இந்திய அரசு ஆழமாக மௌனம் காக்கிறது. அதனால் இந்தியாவும் இந்த நகர்வின் பின்னால் இருக்கிறதா? என்ற ஐயம் தமிழர்களுக்கு ஏற்படுகிறது.” என்று அவர் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் கிளப்பினார். இந்தச் சந்தேகம் தமிழர்களுக்கு ஏற்படுவது நியாயமற்றது, காரணமற்றது என்று எவரும் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
“ஏனெனில், தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு கடந்த காலத்தில் இந்தியா என்ன செய்தது என்பதையும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் தமிழர்கள்” என்றார் அவர்.
தங்கள் எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும் இந்தச் சந்தேகத்தை தீர்க்கும்படி இந்திய மத்திய அரசைக் கேட்கும் உரிமை தமிழர்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சரவணபவன், “தமிழர்களுக்கு நியாயமான ஏற்கக்கூடிய தீர்வு ஒன்று இனியும் தாமதிக்காமல் கிடைப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று நாங்கள் நேர்மையாக எதிர்பார்க்கிறோம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டட்லிசெல்வா, பண்டா செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட நிலையில் சிங்களத் தலைவர்களால் தீர்வு ஒன்று தரப்படாது எனத் தமிழர்கள் நம்பிய வேளையிலேயே இந்திய அரசின் அழுத்தத்தால் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யும் என்ற சிறிய எதிர்பார்ப்பை 13 ஆவது திருத்தம் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அரசின் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன்தான் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இப்போது அதனை நீக்குவது குறித்து மூத்த அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பேசுகிறார்கள். இந்த திருத்தம் தமிழர்களுக்குப் பெரிதாக எதனையும் தந்துவிடவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெரும் தொகையான சொத்துக்களையும் காவுகொண்ட இனப் பிரச்சினைக்கு சில தீர்வுகளை அது முன்வைத்தது. இப்போதோ, மிகப் பெரும் அழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியுடன் நின்றுகொண்டிருக்கிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply