ஹிட்லர் ராஜபக்ஷ அரசிற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்தியா முன் நிற்க வேண்டும் – கி.வீரமணி
ஈழத் தமிழர் விடிவுக்கு ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்புத் தேவை. இந்தப் பிரச்சினையில் மெக்சிக்கோ போன்ற நாடுகளுக்குள்ள ஆர்வம் இந்தியாவுக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர் இனப் படுகொலையை நடத்திய சிங்கள ஹிட்லர் ராஜபக்ஷவின் அரசு, “தீவிரவாதத்திற்கு எதிரான போர்தான்’’ என்று உலக நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி நம்ப வைத்தது. 2009இல் என்ன நடந்தது?
போர் நியதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் மாறுபட்டு சொந்த நாட்டு மக்களையே குண்டு வீசி அழித்தது; போர்ப் பாதுகாப்புப் பகுதியாகிய (குண்டு வீச்சு நிகழாத) வன்னிப் பகுதிக்கு வந்துவிடுங்கள் என்று அந்த நாட்டு பொது மக்களாகிய தமிழர் சிவிலியன்களை நம்ப வைத்து, அவர்கள் சுமார் மூன்றரை லட்சம் பேர் திரண்டி ருந்தபோது அங்கும் குண்டுவீசி கொடூரமாக ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்றது. 90 ஆயிரம் தமிழச்சிகளை விதவைகளாக்கிப் பழி தீர்த்தது.
2009இல் கடைசி கட்டப் போரின்போது, கனரக ஆயுதப் பிரயோகம் நிறுத்தப்பட்டு விட்டது என்று இந்தியா போன்ற நாடுகளுக்குக் கூறி, ஏமாற்றி விட்டு, சரண் அடையவந்த வெள்ளைக் கொடியேந்திய அந்த விடுதலைப் புலித்தலைவர்களையும், சுட்டுக் கொன்று, வெற்றி என்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எக்காளமிட்டது. இந்தியாவும் அது தந்த வாக்குறுதியை நம்பிய தலைவர்களும் ஏமாற்றப்பட்டது.
தங்கள் அரசின் ஹிட்லரிச இன ஒழிப்பு, கருத்துச் சுதந்திர உரிமையைப் பேசுவோர் சிங்களவர்களேயானாலும் கூட அவர்களை சிறைக்குள் தள்ளி சித்ரவதை செய்தது; செய்கிறது (வெளிக்கடை சிறை கலவரம் இப்போதும்) இராணுவத்தின் அடக்குமுறை அம்புகளை அவர்கள்மீது பாய்வது வாடிக்கையாகிவிட்டது. யாழ்ப் பாணம் பகுதி தமிழர்கள் பகுதி என்ற அடையாளத்தையும் மாற்றி அழித்துவிட, சிங்களக் குடியேற்றம் அதிவேகமான முறையில் அமலாகும் கொடுமையும், கோரமும் ஆன அன்றாட அவலங்கள் அங்கே!
சிங்கள இராணுவம், சிங்கள பொலிஸ் என்பதைத் தாண்டி, சிங்கள அரசினாலேயே உருவாக்கப் பெற்று ஆட்களைத் தூக்கும் கூலிப்படை மூலம் கடத்திக் கொலை செய்யும் மற்றொரு ‘‘திருப்பணியும்’’ சேர்ந்திருக்கிறது.
உலக நாடுகளிடம், இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிப்படி, அரசியல் தீர்வு எதுவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வண்ணம் நடந்த பாடில்லை. இன்னும் மோசமான நிலையே!
முள்வேலி அகற்றப்பட்டாலும், சிங்கள இராணுவ இரும்பு வேலிக்குள் தான் ஈழத் தமிழர் தத்தம் அன்றாடப் பணிகளை நிகழ்த்திட வேண்டிய மிக மோசமான நிலையே இன்னமும் நீடிக்கிறது!
சர்வதேசப் பத்திரிகையாளர்களோ, ஊடகங்களோ சுதந்தரமாக இலங்கையின் தமிழர் வதியும் பகுதிகளுக்குள் செல்ல முடியாத நிலைதான் இன்னமும்!
நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு என்று குமுறும் வேளையில், ஐ.நா.வும்., அதன் மனித உரிமை ஆணையும் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க முன் வந்தால் அதுதான் ‘‘முதல் உதவி’’ – ஈழத் தமிழர்களுக்கு!
முதிர்ந்த ராஜ தந்திரியாக கலைஞர் கூறிய கருத்து! ‘இந்திய அரசுக்குப் போதிய அழுத்தம் கொடுப்போம்; அவர்கள் நம் மக்களுக்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே நாம் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) உறுதுணையாக இருப்போம்’ என்று மிகுந்த அரசியல் நாகரிகத்தோடும், கண்ணியத்தோடும், முதிர்ந்த ஒரு ராஜ தந்திரியின் வார்த்தைகளாக நமது டெசோ விழாவில் தி.மு.க. வின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இது சுவர் எழுத்துப் போன்றது; இதைப் படித்துச் செயல்பட வேண்டியது மத்திய அரசின் மகத்தான கடமையாகும்.
இந்திய அரசிடம் இலங்கையில் ராஜபக்ஷ அரசு தந்த உறுதிமொழிகளைச் செயல்படுத்தவில்லை – அரசியல் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை; 4 ஆண்டுகள் ஓடி விட்டன.
இந்திய அரசிடம் முன்பு ஒப்பந்தம் போட்ட இராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே என்பதையும் (அதுவே அவ்வளவு உரிமை தந்த ஒப்பந்தம் அல்ல என்ற உண்மைகூட ஒருபுறம் இருக் கட்டும்.) செயல்படுத்தவில்லை. இந்திய அரசு கூறிய 13ஆவது சட்டத் திருத்தப்படியான (இதில் எவ்வளவு உரிமை ஈழத் தமிழர்களுக்கு என்பதும்கூட கேள்விக் குறிதான் என்ற போதிலும்) அந்த குறைந்தபட்ச மாற்றங்களைக்கூட – அரசியல் தீர்வுகளைக்கூட செய்ய – ராஜபக்ஷ அரசு தயாராக இல்லை.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! மாறாக, ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற முதுமொழிக்கேற்ப, 19ஆவது சட்டத் திருத்தம் என்று ஒன்றை இலங்கை நாடாளுமன் றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய ராஜபக்ஷ அரசு அதனைச் செயல்படுத்த ஆவன செய்து கொண்டிருப்பதாக வருகின்ற செய்தி, கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற உரிமைகளைக் கூடப் பறிப்பதாகவே இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்!
எல்லா மக்களோடும் சகஜமாக வாழ வேண்டும் என்று ராஜபக்ஷ அரசு நினைத்தால், ‘‘போர் வெ(ற்)றிச் சின்னம்’’ கட்ட முன் வருமா?
மறைமுகமாக இந்திய அரசையே மிரட்டுவது போல, சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் “நாங்கள் நெருக்கமாகி அவர்கள் மூலம் இராணுவப் பயிற்சி, இராணுவ உதவிகள், பொருளாதார உதவிகள் எல்லாம் பெறுகிறோம். உங்களை நாங்கள் முழுமையாக நம்பிடவில்லை” என்று கூறாமல் கூறி அச்சுறுத்தல், அலட்சியப் பார்வையோடும் நடப்பது இந்திய அரசு அறியாததா?
உச்சநீதிமன்ற நீதிபதியையே அரசுக்கு ஆதரவான தீர்ப்புத் தரவில்லை என்ற காரணத்தால் பதவி நீக்கம் செய்து, நீதித்துறையையும் அச்சுறுத்தும் ஆணவம் அங்கே கோலோச்சுகிறது!
தேவை பொது வாக்கெடுப்பு! எனவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளி என்ற முடிவுக்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதோடு,
பொது வாக்கெடுப்பையும் நடத்திட, இந்தியா முழு முயற்சிகளையும் செய்து ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசரம் – அவசியம்!
ஐ.நா.விலும் மெக்சிகோ போன்ற நாடுகள் காட்டும் ஆர்வத்தைவிட, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களைப் பாதுகாக்க, இந்திய அரசு மேலும் அதிக மான அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுக்கு எச்சரிக்கை தர முன்வர வேண்டாமா? இத்தருணம், முக்கியமான தருணம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply