இலங்கை கடலருகில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை வானிலை மையம் இன்று (27) வெளியிட்ட தகவல் வருமாறு:-  வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலமான கடல் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்று கன்னியாகுமரி பகுதியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. சின்னமுட்டம் துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. காலை 7 மணி முதலே அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

சூறாவளி மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதையடுத்து சுற்றுலாபயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேவேளை, இலங்கையிலும் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply