நட்டத்தை தடுப்பதற்கு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளவதை தவிர்க்க முடியாது

அரச உடைமை நிறுவனங்களான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா போன்றன பாரிய நட்டங்களை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய எரிபொருள், மின் கட்டணம் போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக அமைந்திருக்குமெனவும், ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட நிறுவன முகாமைத்துவமும் பரந்த நோக்கிலான கட்டமைப்பு மாற்றங்களையும் கொள்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 35 ஆண்டு காலமாக நிலவிய இந்த நிலையற்ற சூழ்நிலையானது, சர்வதேச நாடுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளின் மூலம் சீர்செய்யப்பட்டு வந்தது.

ஆயினும் தற்போது கீழ் மத்திய வருமானமீட்டும் நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் இந்த நிதியுதவிகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறாக தொடர்ந்து விலை அதிகரிப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையில், அந்த விலைச்சுமையை தாங்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுடன், அவர்களுக்கு தரமான சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இல்லையெனில் பாரிய பொருளாதார நிதி நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென குறித்த ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply