முல்லைதீவில் காயமடைந்த நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது:பிரிகேடியர் உதயநாணயகார

முல்லைதீவில் காயமடைந்த நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.  
 புதுமத்தாளன் பகுதியில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்த 16 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியிருந்தபோதும், தாம் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயகார தெரிவித்தார்.

ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றிய பின்னர் அங்கிருந்து 240 நோயாளர்களையும்,116 பொதுமக்களையும் அழைத்துவர சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தாம் அனுமதி வழங்கியதாக அவர் கூறினார்.

“நாம் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை. விடுதலைப் புலிகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமது பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதை அவர்கள் தடுக்க முயற்சித்திருப்பார்கள்” என நாணயகார தெரிவித்தார்.

நோயாளர்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து தாம் அதிர்ச்சியடைவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, நோயாளர்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லையென விடுதலைப் புலிகள் கூறியிருப்பதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையெனவும், இராணுவத்தினரே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நெட் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply