மோதல் பிரதேசங்களில் இருந்து வரும் மக்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்
மோதல் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் பலவும் இடம்பெயர்ந்த மக்களால் நிறைந்து வழிகின்றன. எனினும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களோ, பொதுநிறுவனங்களோ, ஊடகவியலாளர்களோ இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ளவர்கள், வன்னியில் இருக்கும் தமது உறவினர்களின் நிலைமை குறித்து அறிய முடியாதவர்களாக இருப்பதுடன், இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் தமது உறவினர்களும் இருக்கின்றார்களா என்பதைச் சென்று பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத நிலைமையில் உள்ளனர்.
தமது உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், அறிவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளை, வன்னிப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டபோதிலும், இறந்தவர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் அறியமுடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களின் உடைமையில் உள்ள அடையாள அட்டை மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களைக்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும், இதனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால்கூட, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply