மக்களை கேடயங்களாக பயன்படுத்த வேண்டாம் புலிகளிடம் ஆயர்கள் வேண்டுகோள்
இராணுவ ரீதியான நன்மை கருதி தமது கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கும் பொது மக்களை உபயோகிக்க வேண்டாமென கிறிஸ்தவ ஆயர்கள் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொதுமக்களின் வாழ்விற்கும் அவர்கள் அசையும் உரிமைக்கும் எதுவித கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்றும் ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம், மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், அநுராதபுரம் ஆயர் அதிவண. நோர்பட் அன்ட்ராடி, குருணாகல் அங்கிலிக்கன் ஆயர் அதிவண. குமார இலங்க சிங்க, கொழும்பு ஆயர் அதிவண. டுலிப் டி. சிக்கேரா ஆகியோர் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் குறிப்பிடுகையில்:-
வன்னி யுத்தத்தில் காயமடையும் பொதுமக்களின் தொகை அதிகரிப்பது குறித்து சமீபத்திய அறிக்கைகள் எம்மை மிகுந்த கரிசனையடையச் செய்தது. மரணமடைந்தவரின் குடும்பங்களிற்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
“யுத்தமற்ற வலயம்” ஒன்றை அமைப்பதற்கு எடுத்த முயற்சியை நாம் மறுபடியும் வரவேற்கிறோம். ஆரம்ப கட்டநடவடிக்கையை எடுத்ததற்கு இலங்கை அரசிற்கு எமது நன்றி. இந்த ஒழுங்கின் முறைமைகளுக்கு மதிப்பளித்து மிகவும் அவதானத்துடன் அப்பிரதேசத்தை சூழ உள்ள அண்மித்த பகுதிகளில் யுத்தத்தை தவிர்க்கும்படி இருபகுதியினருடனும் பணிவுடன் கேட்கிறோம்.
பொதுமக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பவும்செல்லும் சாதகமான சூழ்நிலை உருவாகும் வரைக்கும் அவர்கள் இவ்வலயத்தில் அடைக்கலம் தேடி தங்கியிருக்க சகல உதவிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வலயத்தின் கண்காணிப்புக்கும், நிர்வாகத்திற்கும் உதவியை வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அகதிகள் வீடமைப்புச் சங்கம், சுயாதீன தமிழ் தலைவர்களை அழைக்கும்படி இலங்கை அரசிடம், எமது கோரிக்கையை நாம் மீண்டும் முன்வைக்கிறோம்.
வன்முறையற்ற முழுமையான இலங்கை உருவாகுவதற்கு எமது செபங்களையும், முயற்சிகளையும் உறுதியளிக்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply