முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் தள்ளி விடுவதற்கு சதி – ரவூப் ஹக்கீம்
விஷமத்தனமான பிரசாரங்களால் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் வலிந்து பிரச்சினைக்குள் இழுக்கப்பட தீய சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் ‘யார் இந்த முஹம்மத் (ஸல்)’ என்ற நூல் வெளியீட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந் நாட்டின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களை தவறான பார்வையில் நோக்கும் வகையில் படுமோசமான விஷமத்தனமான பிரசாரங்கள் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பல இணையத் தளங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் வெளியிடுகின்ற ‘யார் இந்த முஹம்மத் (ஸல்)’ என்ற நூலை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்படுவதை நான் வரவேற்கின்றேன்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் காணப்பட்ட அடிப்படையானதொரு அம்சத்தை இந் நாட்டின் பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்வதற்கு நாங்கள் வகை செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற இந்த இறை மார்க்கம் எவ்வாறு பரவியது என்ற விடயம் சம்பந்தமாக காலம் காலமாக பிழையான, விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் போதிலும் இஸ்லாம் பரவியதன் அடிப்படை ஆரம்பகால முஸ்லிம் சமூகத்திலும் அன்றும், இன்றும், என்றும் சகிப்புத் தன்மைக்கு கொடுத்த முக்கியமான இடம்தான் காரணம் என நாங்கள் அச்சம் இன்றி சொல்லக்கூடிய அளவுக்கு நபிகளாரின் வாழ்க்கையில் நாங்கள் அதன் உச்சத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறோம்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள், சுரண்டிப் பிழைக்க வந்தவர்கள் என்கிற பார்வை மேலோங்கியுள்ளது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து பிடுங்கி எடுக்க வந்தவர்கள் என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சுரண்டிப் பிழைக்க வந்த சமூகம் அல்ல. கொடுத்து வாழ வந்த சமூகம் என்ற பேருண்மை நன்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை உற்று நோக்கும் பொழுது இந்த சமூகம் அடுத்தவரிடமிருந்து பறித்தெடுக்கும் சமூகம் அல்ல, கொடுத்து மற்றவரை வாழ வைக்கும் அடிப்படையான பண்பை தன்னகத்தே கொண்ட சமுகமாகும். ஈகைப் பண்பை உயர்த்திக் காட்டும் சன்மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply