ஜனாதிபதியின் இந்த நிலைக்கு காரணம் ஊடகங்களே – ராஜித்த
குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் ஊடகங்களே செய்தன. ஊடகங்களே ஜனாதிபதியை இந்த நிலைக்கு கொண்டு வந்தன என்று தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு பின்னர் 5 ஆவது குற்றப்பிரேரணையை விசாரிக்கப்பட்டுள்ளதுடன். நீதியரசர்களுக்கு எதிரான மூன்றாவது குற்றப்பிரேரணை இதுவாகும்.
ஒரு குற்றப்பிரேரணையை விசாரிக்கும் தெரிவுக்குழுவில் நான் தலைவராக அங்கம் வகித்துள்ளேன். அக்காலப்பகுதியில் குற்றப்பிரேரணை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னரே பிரேரணை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
அரசியல் இலாபத்திற்காக மாற்றிவிட்டனர்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான இந்த பிரேரணை மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தப்பட்டது. அதற்குள் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக குற்றப்பிரேரணையை மாற்றிக்கொண்டனர்.
குற்றப்பிரேரணைக்கு எதிராக பிரதம நீதியரசர் நீதிமன்றத்திற்கு சென்று மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் உலகத்திலேயே முதல்முறையாக இங்குதான் இடம்பெற்றுள்ளது.
ஒழுக்கங்களை விசாரிப்பதற்காக பல முறைகள் இருக்கின்றன. தெரிவுக்குழு நீதித்துறைசார்ந்த விசாரணையில்லை. இது நாடாளுமன்ற முறைசார்ந்த விசாரணையாகும்.
நீதிச்சேவை ஆணைக்குழு விசாரிக்கும்
நீதியரசர்கள், நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் குற்றமிழைத்திருந்தால் நீதிச்சேவைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும். அங்கு சட்டத்தரணிகள் விவாதிக்கமாட்டார்கள்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் விசாரிக்க முடியாது. அதனால் தான் தெரிவுக்கு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
ஜனாதிபதி, அரச சேவைகளை சேர்ந்தோர் மற்றும் திணைக்களங்களில் பதவி வகிப்போர் மீதும் விசாரணைகள் நடத்தப்படும். குற்றப்பிரேரணை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரிப்பதற்கு ஆரம்பித்து விட்டால் அந்த ஒரு மாதகாலத்திற்குள் நாடாளுமன்றத்தை கலைக்க விடாமல் ஜனாதிபதியின் கைகளும் கட்டப்பட்டுவிடும்.
வருமான வரியை கட்டவில்லை
50 மில்லியன் ரூபாய் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் ஏனைய வழக்குகளை எவ்வாறு விசாரிக்க முடியும். அவ்வாறானவரால் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு என்ன நடக்கும். வருமான வரியை கட்டாமல் மோசடி செய்த ஒருவர் எவ்வாறு ஏனைய வழக்குகளை விசாரிக்கமுடியும்.
ஊடகங்களே உசுப்பேத்திவிட்டன
குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் ஊடகங்களே செய்தன. ஊடகங்களே ஜனாதிபதியை இந்த நிலைக்கு கொண்டு வந்தன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சத்தம் போட்டனர். ஜே.வி.பி.யினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டனர். தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோஷமிட்டனர். இவ்வாறான பின்னணியிலேயே குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply