தேர்தல் சாவடிகளில் குழப்பம் விளைவித்தால் வாக்குகள் ரத்து முடிவுகளும் வெளிவராது:ஆணையாளர் எச்சரிக்கை
வாக்குச் சாவடிகளில் குழப்பங்கள், கலவரங்கள் செய்யப்படுமாயின் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்படுவதோடு அந்த மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடிகளில் கலவரங்கள், குழப்பங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தயானந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் முகவர்கள்
வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளால் நியமிக்கப்படும் கட்சி முகவர்கள் தேர்தலன்று காலை ஆறு மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும்.வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு புத்தகங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும் நிலையம் வரை கட்சியின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் விசேட ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் சீல் வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டலாம்.
வாக்குகள் எண்ணும் நிலையம் வரை செல்லும் கட்சிகளின், சுயேட்சைக் குழுவின் பிரதிநிதி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் வரை தங்கியிருக்கலாம். வாக்குகள் எண்ணும் நிலையத்திற்காக கட்சிகளால், சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதி வந்ததன் பின்னர் மற்றவர் அங்கிருந்து செல்ல வேண்டும்.வாக்குகள் எண்ணும் நிலையத்திலுள்ள கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரதி ஒன்றும் அவர்களது கையெழுத்தைப் பெற்று வழங்கப்படும்.வாக்குச் சாவடிகளில் கட்சிகளால் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கென விசேட பயிற்சிகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் ஜே. வி. பி. மட்டுமே பெப்ரல் அமைப்பின் உதவியுடன் பயிற்சிகளை பெற்றது.
1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலே மிகவும் விரும்பத்தகாத தேர்தலாக அமைந்தது.2003ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் குறைவாகவே காணப்பட்டன. அவரது தீர்ப்பின் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் கலவரம், மற்றும் குழப்பம் ஏற்படுமாயின் வாக்குகள் ரத்துச் செய்யப்படும். அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடைமுறையையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply