மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.

அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-

குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply