2008ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 70 ஊடகவியலாளர்கள் கொலை
2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 70 பேரில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான இடமாக ஈராக் தொடர்ந்தும் காணப்படுவதாகவும், கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. எனினும், 2007ஆம் ஆண்டு 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் கடந்த வருடம் 14ஆகக் குறைவடைந்திருப்பதாகவும், அதிகரிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் உலக பத்திரிகைகள் ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைவிட, ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் உலக பத்திரிகைகள் ஒன்றியம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றஞ்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply