சமாதானம், நல்லிணக்கம் தொடர்பில் உலகிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் :கெஹெலிய ரம்புக்வெல
உலக நாடுகள் எத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் யுத்தத்திற்கு பின்னர் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு தெளிவாக விளக்கமளித்துள்ள தாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.சிலர் கூறுவது போன்று இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், கற்பனையில் எதுவும் கூறமுடியாது என்றார். இந்தியா ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டில் திடீரென மாற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்:
யுத்தத்திற்கு பின்னர் சமாதானம், நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெளிவாக ஆற்றிய உரையே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நாரஹேன்பிட்டியிலுள்ள ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு பின்னர் சமாதானம், நல்லிணக்கம் செயற்பாடுகளில் நாளுக்கு நாள் நாங்கள் முன்னேற்றம் அடைந் துள்ளதுடன் அது தொடர்பில் திருப்தி அடைகின்றோம். எனவே, இது தொடர்பில் மனிதாபிமான முறையில் நாங்கள் முன்னெடுத்த சகல செயற்பாடுகளையும் சர்வதேச சமூகத்திற்கும் உலக நாடுகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதேநேரம் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறான யோசனை கொண்டுவரப்படுமா இல்லையா என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.
எந்தவொரு யோசனையையும் யாரும் கண்ணால் காணவில்லை. இந்நிலையில் தெரியாத, காணாத விடயம் ஒன்று தொடர்பில் கற்பனையில் என்னால் எதனையும் கூற முடியாது. அவ்வாறு கூறவிரும்பவில்லை என்று தெரிவித்த அமைச்சர் இதனையே இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார் என்றார்.
இந்தியாவின் மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலுள்ள நல்லெண்ண தொடர்புகளின் அடிப்படையில் செயற்படுகின்றது. எனவேதான் தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும் தொகையானோர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
அரசாங்கம் ஜெனீவாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சகல சந்தர்ப்பத்திலும் தேவையானவற்றை தெளிவாக கூறியுள்ளது.
அத்துடன், நாங்கள் சகல விடயங்களையும் இராஜதந்திர மட்டத்தில் சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி ஆரியரத்ன அத்துகலவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply