14 லட்சம் கையெழுத்துக்கள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பு

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார்.

தமிழ்நாட்டைச்சேந்தவர்கள் 12 லட்சம் பேர் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இரண்டுலட்சம் பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்னமும் தொடருவதாக தெரிவித்த அனந்தபத்மநாபன், இதில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை பதினைந்து லட்சத்தை தாண்டிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

சுயாதீன சர்வதேச விசாரணை தேவை

இலங்கையில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சுயாதீனமான விசாரணை தேவை என்பதை இலங்கைக்கு இந்தியா ஜெனீவா வழியாக வலியுறுத்தவேண்டும் என்றும், இலங்கையில் தற்போதும் நடந்துவரும் மனித உரிமை மீறல்களை ஐநா தொடர்ந்தும் கண்காணிக்கவேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கும் பயங்கரவாத தடைசட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்கிற மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக அனந்தபத்மநாபன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது தங்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் நாராயணசாமி பொறுமையாக கேட்டுக்கொண்டதாக தெரிவித்த அவர், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அமைச்சரிடம் தாம் பேசியவிஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த பிரச்சனையில் இந்தியா மனித உரிமைகளுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை இன்னமும் எடுக்கத் தயாராகவில்லை என்று தாம் புரிந்துகொண்டதாக அவர் கூறினார்.

ஒருபக்கம் இந்தியாவின் கேந்திரிய நலன்கள், மறுபக்கம் இந்தியாவுக்குள் இருந்து இது தொடர்பில் உருவாகியிருக்கும் அழுத்தங்கள் ஆகிய இரண்டையும் எப்படி கையாள்வது என்பது தான் இந்தியாவின் ஊசலாட்டத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்த அனந்தபத்மநாபன், இந்தியா மனித உரிமைகளுக்கு ஆதரவாக தெளிவான நிலையை எடுக்க தயங்குவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் நாராயணசாமியின் கருத்துக்கள்

இதேவேளை இவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி.நாராயணசாமி, ஜெனீவாவில் உரிய நேரத்தில் இந்தியா உரிய முடிவை எடுக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்ததாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply