கிழக்கு மாகாணத்தில் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் ஏப்ரலில் ஆரம்பம் : பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இந்திய உதவித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இந்திய துணைத்தூதுவரை சந்தித்து கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.
குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை கூடுதலாக பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிராண், வாகரை ஆகிய யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.
இதன் கீழ் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 2000 வீடுகளை தருவதற்கு இணக்கம் தெரிவித்த துணைத்தூதுவர் அதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கு 1000 வீடுகளையும் மற்றும் திருகோணமலை மாவட்டத்துக்கு 1000 வீடுகளை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் முதல் கட்டமாக வெல்லாவெளி, வவுணதீவு, கிராண் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வீடமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்பக்கூட்டம் அடுத்த வாரமளவில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதமாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கையெடுப்பதாக துணைத் தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply