ஜெனிவா தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம்
இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த தீர்மானத்தில் கூட கடந்த தடவை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா தீர்மானத்தை ஆதரித்ததே தவிர, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் அது செயற்பட்டது என்றும் அவர் குறை கூறியுள்ளார்.
இந்திராகாந்தி போல ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில் பயந்தாங்கொள்ளி தனமான முடிவுகளை அது எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் நடந்த சம்பவங்கள் என்னவென்று இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும் என்றும், ஒரு தார்மீக அடிப்படையில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவும் தேவையில்லை என்று கூறிய சகாதேவன் அவர்கள், இத்தகைய தீர்மானங்கள் காரணமாக இலங்கை இறங்கிவரத்தொடங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை விடயத்தில் அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்தால், அதனால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறும் சகாதேவன் அவர்கள், அதனை இந்தியத் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
உண்மையில் இலங்கையில் இந்தியா எந்தவிதமான போரையும் நடத்தவில்லை, நீங்கள் நடத்துங்கள் என்று இலங்கைக்கு கூறிவிட்டு வாயை மூடிக்கொண்டு இருந்தது என்பது உலகுக்கே தெரிந்த விடயம் என்று கூறும் சகாதேவன அவர்கள், ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்காக தானே போரை நடத்தியதாக ஏற்கனவே கூறிவிட்டதால், இந்தியா மீது இந்தப் போர் குறித்த பழி வந்துவிடும் என்று அது பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
அதேவேளை, இந்தத் தடவைகூட இலங்கைக்கு எதிராக வரக்கூடிய தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply