அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: ஆயிரக் கணக்கானோர் கைது

ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் கணக்கான திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பண்ருட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கைது

பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெசோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தி.கவினர் உள்ளிட்ட டெசோ அமைப்பினர் திமுக அலுவலகத்தில் இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு வந்தனர். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 500க்கும் மேற்பட்டோர் கைது

டெசோ அமைப்பு சார்பில் மதுரை பெரியார் பேருந்துநிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினரை பொலிசார் கைது செய்தனர்.


திருச்சியில் 500 பேர் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, நகரச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் டெசோ வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை உடனே எடுத்திடு, அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை உடனே ஆதரிக்க வேண்டும் கோஷம் எழுப்பினர். பின்னர் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பொலிசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி வாசவி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டையில் திமுகவினர் 100 பேர் கைது

இலங்கை தமிழர்களுக்காக டெசோ அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டிருந்த பொதுவேலைநிறுத்தத்திற்கு புதுக்கோட்டையில் வணிகர்கள் உட்பட பெரும்பாலானோர் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

புதுக்கோட்டை நகரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் பேருந்து நிலையத்தில் மட்டும் நகர்மன்றத்திற்கு சொந்தமான கடைகள் என்பதால் திறக்கப்பட்டிருந்தன. திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமையில் திரண்ட திமுகவினர், நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்க்க சென்றபோது, மாவட்ட எஸ்.பி. தமிழ் சந்திரன் அங்கு செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதல் கட்டமாக திமுக மாவட்டச் செயலாளர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் அறிந்து மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் மறியல் செய்த முயன்ற சுமார் 50க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply