இலங்கைக்கு எதிராக தமிழக மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை ஜனாதிபதியை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் பொலிசார் அகற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர் போராட்டம் -உண்ணாவிரதம்

இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டகல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். தவிர கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்‌கலை. பாலிடெக்னிக், கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் வகுப்புக்களை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, இலங்கை ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்திட கோரியும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து சிதம்பரம் அண்ணாமலை பல்க‌‌லை. மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. மாணவர்கள் 25 பேர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை துவக்கியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்து வருகிறது.

சென்னையில் வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதாகினர். புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரம் பேர், வேலூர் குடியாத்தம் அரசு கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அறிஞர் அண்ணாத்துரை அரசு கல்லூரி மாணவர்கள்இ திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள்இ திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் ‌தொடர் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மாவட்ட கலெக்டருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply