புலிகளுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் வன்னி மக்கள் : மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்)

வன்னியிலுள்ள மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியிருப்பதாக முன்னணி தமிழ் மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. வன்னியில் ஆயுதக் குழுக்களின் பிடியில் சிக்குண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தனி நாடென்ற மாயைக்குள் சிக்குறச் செய்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தடைகளை அங்குள்ள மக்கள் மீறத்தொடங்கிவிட்டனர். மக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்தும் அச்சம் தோன்றியுள்ளது. அதேநேரம், அரசாங்கப் படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளன” என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராஜன் கூல் மற்றும் சிறிதரன் ஆகியோர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளாலும், அரசாங்கப் படைகளாலும் தாக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கு மேலதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, ஆயுதக் குழுவின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான சவாலை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு மீட்கப்படும் மக்களை உரிய முறையில் பராமரிக்கவேண்டுமெனவும் அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜன் கூல் கூறியுள்ளார்.

அதேநேரம், இலங்கை அரசாங்கம் தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், நம்பிக்கையுடன் செயற்பட வேண்டுமென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையானது பொதுமக்களைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் மனோநிலையைப் பாதித்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply