பேரினவாதத்தின் தற்போதைய இலக்கு முஸ்லிம்கள் !
கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த நல்லிணக்கத்தை கண்காணாத் தூரத்துக்கு அனுப்பியது தான் அரசின் இன்றைய குறிப்பிடும் படியான சாதனை. இச் சாதனையானது திடீரென ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. மாறாக நன்கு, நீண்ட கால அடிப்படையில் முறையான திட்டமிடலின் மூலம் மோற்கொண்ட செயற்பாடுகள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
பொது பலசோ முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும் வெளியிட்டுள்ள கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த நல்லிணக்கத்தை கண்காணாத் தூரத்துக்கு அனுப்பியது தான் அரசின் இன்றைய குறிப்பிடும் படியான சாதனை. இச் சாதனையானது திடீரென ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. மாறாக நன்கு, நீண்ட கால அடிப்படையில் முறையான திட்டமிடலின் மூலம் மோற்கொண்ட செயற்பாடுகளால் ஏற்பட்டதாகும். நம் நாட்டு நடப்புக்கள் யாவும் இதனைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
பல்லின, பல்மத, இரு மொழி பேசும் இலங்கையில் தமிழர் தரப்பின் நியாயமான உரிமைகளை சாத்வீகம், ஆயுதம் என பல போராட்ட வடிவங்களுடன் போராடியும் இன்று வரை பேரனவாத அரசின் முன்பு எவையும் எடுபடவில்லை என்பதே யதார்த்தம்.
தமிழினம் தீவிரமாக தனது உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டவேளை இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம் இனத்தவரை தமது செல்லப் பிள்ளைகள் போன்றே பேரினவாத அரசியல்வாதிகளும், அரசும் நடத்தியது.
தமிழர்களுடன் அவர்களுக்கு நெருங்கிய உறவுகள் ஏற்படாத வகையில் தனது நடவடிக்கைகளைக் கச்சிதமாக செயற்படுத்தி சில வேளைகளில் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் இனக்கலரவரத்தையும் ஏற்படுத்தி இரு சிறுபான்மை இனங்களையும் பகைமை கொண்ட சமூகமாக ஆக்கி வைப்பதில் அரசு வெற்றி கண்டே வந்தது.
தமிழர் தரப்பினர் போராட்டம் நடைபெற்றவேளை தமிழ்த் தலைமைகள் முஸ்லிம் சகோதர அரசியல் தலைமைகளைப் பார்த்து கூறியது இப்போது நினைவுக்கு வருகின்றது.
தமிழர் தம் இருப்பும் நிலமும் மொழியும் பண்பாடும் அழிக்கப்பட்ட பின் பேரினவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம் சமூகமாகவே இருக்கும் எனவும் அதனை முளையிலேயே தடுக்க வேண்டுமாயின் சிறபான்மை இனங்களின் ஒற்றுமையின் மூலமே சாத்தியமாகும் என எடுத்து இடித்து உரைத்தனர். தமிழர் தரப்பு நியாயம் அப்போதைய சூழலில் எடுபடவில்லை. ஆனால் தமிழர் தரப்பு அன்று கூறியது இன்று காட்சிகளாக அரங்கேறுகின்றது. முஸ்லிம்களது இன, மத, பண்பாட்டு, பொருளாதார சுத்திகரிப்பில் பேரினவாதம் தனது அகோரப் பார்வையை செலுத்தத் தொடங்கிவிட்டது.
இதை இனி எவராலும் தடுக்க முடியாது. ஏன் எனில் இது நெறிப்படுத்தப்பட்ட முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதாகும். மாறாக அரசு கூறுவது போல ஒரு சிறு குழுவின் செயற்பாடல்ல. தமிழர் தரப்பு தனது கடந்த கால அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனைக் கூறுகின்றது.
நடப்பவைகளைப் பார்த்தால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பொலிஸாரிடமோ, நீதி மன்றங்களிடமோ, அல்ல. அது பேரினவாதிகளின் கைகளிலேயே உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைதியினைச் சீர்குலைத்து இன மதங்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துபவர்கள் எவரையுமே வழமையான பாணியில் இனம் புரியாத குழுக்கள் என்ற வரையறைக்குள் அடக்க முடியாது.
மாறாக அனைவரும் பட்டப்பகலில் பாதுகாப்புத் தரப்பினர் முன்நிலையிலேயே தம் அடாவடித்தனங்களை நடத்தினர். இவற்றை நம் நாட்டு அனைத்து ஊடகங்களிலும் நம்மால் பார்க்கமுடிந்தது. இவர்கள் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள்.
அரசுத் தலைமை அழைத்துப் பேசுவதாலோ கட்டி அணைப்பதினாலோ அல்லது அரச குழுவினருடன் தேநீர் விருந்துபசாரம் செய்வதினாலோ மட்டும் இவை தடுக்கப்படமுடியாது. அப்படி அரவணைத்த அருந்திய பல அனுபவம் தமிழர் தரப்புக்கு உண்டு.
எனவே இவை நிறுத்தப்பட சிறுபான்மை இனங்களது இன, மத, கலாசாரம், பொருளாதார அம்சங்கள் பாதுகாக்கப்பட பாதிக்கப்பட்ட இனங்கள் ஒற்றுமைப்படுவதே தற்போதைய காலத்தின் கட்டாயம்.
அப்படி இல்லையெனில் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை நம் சமூகத்தின் முன்நின்று கண்ணைத் திறந்து கொண்டே படுகுழியில் விழுந்தோம் என்று கூறவேண்டிய நிலை ஏற்படும் இது தவிர்க்க பட வேண்டும். இது ஆலோசனையோ, அறிவுரையோ அல்ல அனுபவம் தந்த பாடம். அனுபவத்தைப் பகிர்வது ஒன்றும் தவறில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply