முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள் குடியேற்ற நடவடிக்கை
முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 1444 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இதற்கான அனுமதியை, வனவளத் திணைக்களத்திடமிருந்து பெற்றுத் தந்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் இவர்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி இறுதிக்கட்ட யுத்தத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் 6000ற்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்வதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவர்களைப் படிப்படியாக மீள்குடியமர்த்து வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு மீள்குடியேறத் தயாராகவிருக்கும் மக்களுக்குக் காணிக் கச்சேரிகளின் ஊடாக அரச காணிகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்தார்.
இறுதிக்கட்ட மோதல்களின் போது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருப்பதாகவும், அடுத்த கட்டமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும், இறுதிக்கட்டமாக நீண்ட காலங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply