தமிழக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது!
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்தது. முதலில் 19 மீனவர்களும் அடுத்து 34 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.
மேலும் ராமேசுவரம் மீனவர் சங்கங்கள் ஆலோசனை நடத்தி மீனவர்களை விடுதலை செய்யும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். மேலும் 22-ம் திகதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடப்போவதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இலங்கை கடற்படை கைது செய்த 34 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முதலில் கைது செய்யப்பட்ட 19 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அதுவரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என மீனவர் சங்கங்கள் அறிவித்தன.
இதன்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று 7-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் முன்பு அறிவித்த படி மத்திய அரசு அலுவலகமான தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply