இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பாதிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு விரைவில் அரசாங்கம் பொருளாதார மீட்புத்திட்டமொன்றை முன்வைக்கும் என பிரதி நிதியமைச்சர் தெரிவித்தார்.  பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான மீட்புத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து முடித்திருப்பதாகவும், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கூறினார்.

அதேநேரம், அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் மீட்புத் திட்டம் இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

“மீட்புத் திட்டம் குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கூறியிருப்பதுடன், கோல்டன் கீ மற்றும் சக்வித்தி போன்ற நிதி நிறுவனங்களில் முதலிட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளையும் எடுத்துக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பொருளாதார மீட்புத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் முன்வந்திருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் இலங்கைக்கு இதுவரை பாரிய பாதிப்புக்கள் ஏற்படாதபோதும், நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் பல்தேசியக் கம்பனிகள் உட்பட பல நிறுவனங்கள் செலவுச்சுருக்கங்களை ஆரம்பித்திருப்பதுடன், மேலதிகமாகவுள்ள பணியாளர்களை பணியிலிருந்து இடைநிறுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

இலங்கையிலுள்ள சர்வதேச உள்ளூர் வங்கியொன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தியிருப்பதுடன், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் ஒப்பந்தங்கள் மீளப் புதுப்பித்தலை இடைநிறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, இலங்கையிலுள்ள முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் பணியாளர்கள் சிலரைப் பணியிலிருந்து இடைநிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply