இந்தியாவை இலங்கை போற்றுகிறதா ? தூற்றுகிறதா ?

ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசு நடந்துகொண்ட முறைமையை இலங்கை அரசாங்கம் போற்றுகிறதா அல்லது தூற்றுகிறதா என்ற சந்தேகம் இலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தின் கடுமையை குறைத்து இந்தியா செய்த உதவிக்கு, அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் இந்தியாவை கண்டித்து உள்ளனர். இது இந்தியா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இரண்டு முகங்களை காட்டுகின்றது.

இந்த இரண்டு இலங்கை முகங்களில் எது உண்மையானது என்பது தொடர்பிலும், இது சம்பந்தமாக இந்தியாவின் உண்மையான முகம் எது என்பது தொடர்பிலும் இன்று பாரிய கேள்விகள் எழுந்துள்ளன. இவை தமிழ் சமூகத்தின் மனசாட்சி இன்றைய தினத்தில் எழுப்பும் கேள்விகள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

மனித உரிமை விசாரணைகள் தொடர்பில், இலங்கைக்கு நேரடியாக வருகை தருவதற்கு ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உரித்துரிமை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த அமெரிக்க தீர்மான வாசகங்களை இந்திய அரசு மாற்றியமைத்தது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்றுகொண்டுளார். இதன்மூலம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிக்காக அவர் பகிரங்கமாக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மனித உரிமை ஆணைக்குழுவின் இந்திய பிரதிநிதி திலிப் சிங்ஹா ஆற்றிய உரை தொடர்பில், தனது கண்டனத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வெளிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்பு கூறல் விடயங்களை பற்றி பேசி இந்தியா தம்மை ஏமாற்றிவிட்டது என அவர் கூறியுள்ளார். இவரது கருத்தையே வீரவன்ச, ரணவக்க ஆகிய அமைச்சர்களும் எதிரொலித்துள்ளனர்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எது உண்மையானது என இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அதேவேளையில் மனித உரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் இந்திய மத்திய அரசு முன்னெடுத்த உண்மையான கொள்கை எது என்பது பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய ஆதரவு, இந்திய எதிர்ப்பு ஆகிய இரண்டு எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்து கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களையும், இத்தகைய நிலைப்பாடுகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவதன் மூலம் இந்திய அரசு தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்றனவா என்ற கேள்விகள் இன்று எழுந்துள்ளன.

சொல்லொணா துன்பங்களுக்கு முகங்கொடுத்துவிட்டு, இன்று பாரிய எதிர்பார்ப்புகளின் மத்தியில் வாழ்ந்துவரும் தமிழ் இனத்தின் மனசாட்சி இன்றைய தினத்தில் எழுப்பும் கேள்விகளையே நான் இங்கே எதிரொலிக்கின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply