இலங்கை-இந்திய உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது

இந்தியா-இலங்கை உறவுகள் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசன் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள் ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை பயனுள்ள வகையிலும், அர்த்தமுள்ள வகையிலும் திறம்பட செயல்படுத்த இரு நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த உடன்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

இலங்கையில் விளையும் தேயிலை உலக பிரசித்தி பெற்றது ஆகும். தேயிலையை பதப்படுத்தும் பணி, ´பேக்கேஜிங்´ வினியோகம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இலங்கையிலும், கேரளாவிலும் உலக தரம் வாய்ந்த தேங்காய் விளைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகபட்ச ஆதாயம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இரு நாடுகளும் ஆராயவேண்டும்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது அதிகரித்து இருப்பதால் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு இலங்கை தூதர் கரியவாசன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply