தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?

பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான ஒத்திகைகள் தொடங்கி உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளுமே கூட்டணியில் இருந்து விலகி அரசியல் களத்தில் தனித்தனியாகவே இயங்குகின்றன. வருகிற தேர்தலில் எந்த கட்சி எந்த கட்சியுடன் கை கோர்த்து கூட்டணி அமைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.   ஆனால் திரைமறைவில் கூட்டணிக்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடந்து வருகிறது. காங்கிரஸ் உறவை முறித்து வெளியேறிய தி.மு.க. இனிமேல் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டன. அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே ஏற்பட்ட விரிசல் இனிமேல் ஒட்டாது என்பது உறுதியாகிவிட்டது.

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த கட்சிக்கு 15 சதவீத செல்வாக்கு இருப்பதாக கணிக்கப்படுவதால் தே.மு.தி.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்று தி.மு.க. நம்புகிறது. எனவே தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சிகள் மும்முரமாக நடக்கிறது.

அதற்கு ஏற்றாற் போல் சட்டசபையிலும் தே.மு .தி.க.வுக்கு ஆதரவாளரின் நிலைப்பாட்டையே தி.மு.க. கடை பிடிக்கிறது. நேற்று 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு நீக்கப்பட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே போல் இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சிப்பதை நிறுத்தி விட்டன. விஜயகாந்தும் தி.மு.க.வை அவ்வளவாக விமர்சிப்பதில்லை.

இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நெருக்கம் அதிகரிப்பதையே காட்டுகிறது. அதே நேரத்தில் காங்கிரசும் தே.மு.தி.க.வை வளைத்து போட முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் பக்கம் செல்வது பலன் தராது என்று கட்சி மேலிடம் கருதுவதாக தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இரு கட்சி வட்டாரத்திலும் பலமான பேச்சு அடிபடுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply