மத்திய அரசின் அலுவலகங்களை முடக்கி போராட்டம்: மாணவர்கள் அறிவிப்பு
தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று (26) சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.
வருகிற 31-ந் திகதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம்.
எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிடுவோம். மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமுன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply