தமிழகத்திற்கு பயணத்தடை அறிவிக்க வேண்டும் – ஹெல உறுமய

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு யாரும் செல்லமுடியாதபடி, பயணத்தடையை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தமிழகம் இலங்கையர்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என்று இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் அதனால் சர்வதேச உடன்படிக்கைகள் மீறப்படுவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சார்க் கூட்டமைப்பின் சட்டவிதிகளுக்கு எதிராக தமிழகம் செயற்படுவதாகவும் ஆளும் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும்போக்கு, இனவாத, தீவிரவாதக் கட்சிகள் என்றும் ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும்போக்கு தேசியவாத பௌத்தக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது.

தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற சூழ்நிலையில் கச்சதீவை மீட்கக் கோருவது, ஐபிஎல் விளையாட்டு வீரர்களுக்கு தடைவிதிப்பது போன்ற செயற்பாடுகள் மூலம் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுத்துவருவதாகவும் ஹெல உறுமய கூறுகிறது.

ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் தமிழகத்தில் போராட்டங்கள் ஓய்ந்துவிடும் என்று தாம் நம்பியதாகவும் ஆனால் தொடர்ந்தும் போராட்டங்கள் நடந்தும் இலங்கை அரசாங்கம் இந்திய அரசிடம் இன்னும் தமது கண்டனத்தை தெரிவிக்காதது தவறு என்றும் தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர், குறைந்த பட்சம் இந்திய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை அரசு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு செல்வோரை தடுக்கும் விதமாக பயணத்தடையை அறிவிப்பதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் சுற்றுலா வருமானத்தை தடுக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply