அம்மா ஆட்சியில் செருப்பை கழற்றச் சொன்னவருக்கு சிறை
மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடுத்த, சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவர் கருணாநிதி, அன்று இரவே காவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
எழுபது வயதான இந்த மருத்துவர் இரவோடிரவாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செயல் பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுக தலைவர் மு கருணாநிதி, ’70 வயதான ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? யாரையாவது கொலை செய்து விட்டாரா? கொள்ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித்தான் சென்றுவிட்டாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு மருத்துவ சங்கங்களும், வழக்கறிஞர் அமைப்புக்களும் கூட இந்த கைது நடவடிக்கையை கண்டித்திருக்கின்றன.
மருத்துவர் கருணாநிதி மீதான வழக்கு பொய்வழக்கு என்று கூறிய இந்திய மருத்துவர் சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் விஜயகுமார், அந்த வழக்கை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply