இலங்கை விவகாரத்தில் இந்தியா தோல்வியடைந்து விட்டது – ரணில்

இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, மட்டக்களப்பு நகரில் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.

2009-ம் ஆண்டு தம்மிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பிடமும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் அதற்கு மேலும் சென்று அதிகாரத்தைப் பகிரவும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு கூறியது. ஆனால் அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசு தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச்செய்வதில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளதால் இனிமேல் அந்த பாதையில் பயணிக்க முடியும் என தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓரே வழி அனைத்து சமுகங்களும் இணைந்து பணியாற்றுவதே. காரணம் பெரும்பான்மை சமூகம் மீது சில கோரிக்கைகளை திணித்து அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

‘நாட்டில் தமிழ் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களது பிரச்சனை தற்போது சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இந்தியா உட்பட பல இடங்களில் இப்போது இது எதிரொலிக்கிறது. இந்த விவகாரம் இந்தியாவை ஆளும் அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது’ என்றும் ரணில் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply