தலைநகர் மேதினக் கொண்டாட்டங்களில் ஆறு இலட்சம் பேர் பங்கேற்பார்கள்

தலைநகரில் இம்முறை இடம் பெறும் மே தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் 13 பேரணிகளுக்கும் 17 கூட்டங்களுக்கும் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தின பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபரான பீ.டீ.ஏ.கே.சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சூல டீ.சில்வா மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, மே தினத்தன்று அநாவசியமாக கொழும்புக்கு வருவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறித்த தினத்தன்று கொழும்பு நகரின் ப ாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை சீர்படுத்தவென பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் வழிகாட்டலுக்கமைய 3,000 பொலிஸார் வெளி இடங்களிலிருந்து பணிக்கு அழைக்கவுள்ளோம். வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கை பாதிக்கப்படாதவாறு போக்குவரத்துத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பீ.டீ.ஏ.கே.சேனா ரத்ன விளக்கமளித்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது;

மே முதலாம் திகதி தலைநகரின் பாதுகாப்புக்கென 2,981 போக்குவரத்துப் பொலிஸார் உள்ளிட்ட 6,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுமார் 10,000 வாகனங்கள் வரையில் மே தினக் கொண்டாட்டங்களுக்காக தலைநகருக்குள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்படி பொரளையூடாக போக்குவரத்து மேற்கொள்வோர் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பொரளைச் சந்தியூடாக போக்குவரத்தை தவிர்த்து ஊறுகொடவத்தை, வெல்லம்பிட்டிய, ஒபேயசேகரபுர, ராஜகிரிய ஊடாக போக்குவரத்தை கண்டி வீதியிலிருந்து உள் நுழைவோர் பயன்படுத்த முடியும். அத்துடன் காலி வீதியிலிருந்து கண்டிவீதிக்குச் செல்வோர் ஆமர் வீதியூடாக செல்வதைத் தவிர்த்து ஹெட்டியாவத்தை அல்லது புளூமெண்டல் ஊடான பாதையைப் பயன்படுத்தலாம். அதிவேக பாதையினூடாக பயணங்களை மேற்கொள்வோர் அதிவேக பாதையை பயன்படுத்த மாலபே, கடுவலைஊடான பாதையைப் பயன்படுத்தலாம்.

கொழும்பு பிரதேசத்துக்குள் மே தினத்துக்காக உள் நுழையும் வாகனங்கள் தொடர்பில் விசேட அடையாளங்கள் ஒட்டப்படவுள்ளதுடன் அவை நிறுத்தி வைக்கவென விசேட தரிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல்களை கையாள 2,981 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதுடன் 172 விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள்களும் கடமையின்போது பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளி இடங்களிலிருந்து புறக்கோட்டை வரை எவ்வித தடையுமின்றி பொது மக்கள் தமது பயணத்தைத் தொடரலாம். வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோர் வழமையான 103 ஆம் இலக்க பாதையைப் பயன்படுத்த முடியும் என்பதுடன் மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் மே தின ஊர்வலம் செல்லும்போது டீன்ஸ் பாதையை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

போக்குவரத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். குறித்த மே தின கொண்டாட்ட நேரங்களில் அநாவசியமாக கொழும்புக்குள் பிரவேசிப்போர் அதனை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply