ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் – மே தினச் செய்தி
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அணி திரண்டுள்ள உழைக்கும் மக்களுடன் தானும் சினேக பூர்வமாக இணைந்து கொண்டு அவர்களின் உயர்வுக்காக உழைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-சர்வதேச தொழிலாளர் தினத்தை மதிப்புடனும் கெளரவத்துடனும் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை எமக்களித்த எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகளை மிகுந்த கெளரவத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
எமது நாடு இன்று ஒரு மத்திய தர வருமானம் பெறும் நாடாகவுள்ளது. தேசிய பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்தியதன் காரணமாக இந்த அடைவை நாடு அடைந்துள்ளது. இதன் பின்னாலுள்ள மிக முக்கிய சக்தியாக எமது நாட்டின் உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டின் எதிர்காலம் குறித்த மிகச் சரியான பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டினதும் அரசாங்கத்தினதும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு மிகுந்த பொறுப்புணர்வுடன் எப்போதும் செயற்படுகின்றனர். இந்த ஒத்துழைப்பு சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் பாரம்பரியங்களைப் பாதுகாத்துள்ளதுடன் உலகின் உழைக்கும் மக்களின் கெளரவத்திற்கு பங்களிப்புச் செய்யும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் உதவியுள்ளது.
இன்று கிராமும் நகரமும் சம அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளன. விவசாயத்துறையிலும் தொழிற்துறையிலும் அரசாங்கம் முறையான கவனத்தைச் செலுத்துகின்றது. அரசாங்க மற்றும் தனியார்த்துறை சேவைகளின் பாதுகாப்புக்காக சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
எனவே, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு சமூகத்தை நாம் இன்று கட்டியெழுப்பி யுள்ளோம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகளை எமது மக்கள் இன்று அனுபவிக்கின்றனர். சிறந்த தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதார வசதிகளினூடாக எமது உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன் கொண்டு செல்வதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் திட உறுதியுடனும் அர்ப்பணத்துடனும் கைகோர்ப்போம். எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச் செய்யும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கும் வெற்றி கிட்ட வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply