புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல்: 40 பேர் காயம், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன
கொழும்பில் குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்காக வந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விண் கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றது.
இந்த விமானத்தைச் செலுத்தி வந்த விமானியின் சடலமும் விமானப் படையினரால் மீட்கப்பட்டது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு விமானம் கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள இலங்கை விமானப் படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயன்றபோது இலக்குத் தவறி விமானப் படைத் தலைமையக்துக்கு எதிரிலிருந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கட்டடத் தொகுதியில் குண்டு விழுந்ததால் கட்டடத்துக்குச் சிறிது சேதமேற்பட்டதுடன் 40 பேர் காயமடைந்ததாகவும் இராணுவ தரப்பு ஊடகப் பேச்சாளர் உதய நாணயக்கார லங்கா ஈ நியூஸூக்குத் தெரிவித்தார். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, விமானப் படை மற்றும் இராணுவத் தரப்பு பேச்சாளர்கள் தெரிவித்த தகவலின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்காக கொழும்பு வான் பரப்புக்குள் வந்ததாகத் தெரிவித்தனர்.
இந்த இரு விமானங்களும் கொழும்பை நோக்கி வருவதனை மன்னாரிலுள்ள ராடர் கருவிகள் சமிக்ஞைப் படுத்தியுள்ளன. இன்றிரவு 9.30 மணியளவில் கொழும்புப் பிரதேசத்துக்குள் இந்த விமானங்கள் நுழைந்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் விமான எதிர்ப்புக் கருவிகளும் இயங்கச் செய்யப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply