தேசிய நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோரை சிறையிலடைக்கும் கொடூர அரசியல் கலாசாரமே நாட்டில் நிலவுகிறது: ரவி கருணாநாயக்க எம்.பி.
நாட்டின் வைத்தியசாலைகளும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டதாகவும் குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக திரியும் போது தேசிய நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோரை சிறையிலடைக்கும் கொடூர அரசியல் கலாசாரமே தற்போது நாட்டில் நிலவுவதாக ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.குற்றப் புலனா ய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்வையிட ரவி கருணாநாயக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜயலத் ஜயவர்தனவுடன் நேற்று இரவு வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.
இதன்போது அஸாத் ஸாலியை பார்வையிட குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அஸாத் ஸாலியை பார்வையிட வந்த அ.இ.மு.கா. பாராளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் ஏமாற்றத்துடன் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
அஸாத் ஸாலியின் மனைவி, பிள்ளைகளுக்கேனும் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அங்கு சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் டாக்டர், ஜயலத் ஜயவர்தன ஆகியோர் பாதுகாப்பு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புச் சலுகைக்கு மேலதிகமாக வைத்தியர் என்ற வகையிலேனும் டாக்டர். ஜயலத் ஜயவர்தனவை வைத்தியசாலைக்குள் அனுமதிக்காமை குறித்து வாக்குவாதத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்து புலனாய்வுப் பிரிவு பொலிஸார் டாக்டர். ஜயலத்துடன் தமது கடமையினையே தாம் மேற்கொள்வதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து திரும்பிய குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கேசரியிடம் பின்வருமாறு கருத்து வெளியிட்டனர்.
ரவி கருணாநாயக்க எம்.பி.
இன்று வைத்தியசாலைகள் கூட சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் முழு நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றியுள்ள அரசு பொலிஸாரை பயன்படுத்தி அடக்குமுறையினை ஏற்படுத்தி நாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முன்னெடுக்க விழைகின்றது.
அஸாத் ஸாலி என்ன குற்றம் செய்தார்? தனது சமூகம் தொடர்பிலும் தான் பேசியது குற்றமா? தமது சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசியது குற்றமா?
பிள்ளையான், கே.பி. போன்ற பயங்கரவாதிகளும் கொலைக்காரஅமைச்சர்களும் சுதந்திரமாக திரியும் நிலையில் அஸாத் ஸாலியை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொடுமைப்படுத்துவது சரியா?
தேசிய வைத்தியசாலையில் ஒரு நோயாளியை கூட பார்வையிட முடியாத நிலையொன்று இன்று ஏற்பட்டுள்ளது.
ஒரு வைத்தியரை கூட வைத்தியசாலையின் உள்ளே அனுமதிக்காமை கவலையளிக்கிறது எனத் தெரிவித்தார்.
ஜலயத் எம்.பி.
இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியர் ஒருவர் நோயாளியை பார்வையிட மறுக்கப்பட்டுள்ளார். நான் ஒரு அரசியல்வாதி என்பதைத் தாண்டி என்னைநோயாளி ஒருவரை பார்வையிட அனுமதிக்காமை கவலை அளிக்கிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அஸாத் ஸாலி அனுமதிக்கப்பட் டுள்ள 55ஆவது வார்ட் பிரிவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே காத்திருக்க பாதுகாப்பு தரப்பினரால் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவரும் குறித்த பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிகிச்சையளிக்கும் வைத்தியர்களும், தாதியர்களும் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பிலேயே தமது கடமைகளை முன்னெடுத்தமையை வைத்தியசாலை வட்டாரங்களூடாக அறிய முடிந்தது.
எனினும் அஸாத் ஸாலியின் உடல்நிலை தொடர்பில் உண்மையான விபரங்களை உடனடியாக அறிய முடியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply