இலங்கை அரசுக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து, இடம்பெயர்ந்துள்ள மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசுக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.வாழ்வாதாரம் உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே மக்கள் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது.மூன்று நாள் விஜயமாக வியாழனன்று கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் பிரண்டன் ஓ கான்னரை சந்தித்தபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

‘பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடப்பதென்பது, இலங்கை அரசாங்கத்தை மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றமுள்ள நாடாக மாற்றுவதற்கு எவ்வளவு தூரம் உதவிபுரியும் என்பதை ஆஸ்திரேலியா தான் சிந்திக்க வேண்டும்’ என்று பிரண்டன் ஓ கான்னரிடம் தாங்கள் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள்

இதற்கிடையில், வடமாகாண சபைக்கான தேர்தல் நடக்குமேயானால், அதுபற்றிய அறிவித்தல் வெளியாகும் தினத்தில் இருந்து சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கில் நிலைகொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசியல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதனால், அங்கு நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமாக இருப்பதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வடமாகாண சபைக்கான தேர்தல் பற்றி தமக்கு இன்னும் அறிவித்தல் வழங்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான இந்தச் சந்திப்பின்போது தம்மிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply