கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது

கர்நாடகாவில் உட்கட்சிப் பூசல் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.தென் இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சி கடந்த முறை பெற்ற இடங்களில் பாதியளவைக் கூட இம்முறை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த்து.இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் குறிபிடத்தகுந்த வெற்றிக்ளைப் பெற்றுள்ளது.

இந்த தேர்தல் தோல்வி தமக்கு ஒரு பெரிய அடி என்று பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கட்சியின் தலைவராக அண்மையில் மீண்டும் ஒரு முறை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராஜ்நாத் சிங் அவர்களின் தலைமைக்கு இது ஒரு பெரிய சவால் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கர்நாடகத் தேர்தலில் மாநிலப் பிரச்சினைகள், உள்ளூர் பிரச்சினைகள் மையமாக இருந்தது என்பதால் இந்தத் தோல்வி தேசிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் பா ஜ க கூறுகிறது.

இதே வேளை காங்கிரஸ் கட்சியில் உற்சாகம் மேலோங்கியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னின்று நடத்திய கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரும், ராகுல் காந்தியின் ஆலோசகர் என்று கருதப்படுபவருமான மதுசூதன் மிஸ்த்ரி கர்நாடக மக்களின் கௌரவம் இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பெறப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த நிர்வாகம் மற்றும் ஊழல்களின் காரணமாக வெறுப்படைந்திருந்த மக்கள் ஒரு மாற்றத்துக்காகவே தமக்கு வாக்களித்தனர் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் இதுவரை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்திராத சூழலில் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரக் கூடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply