யுத்தத்துள் சிக்கியுள்ள மக்களை புலிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் : பிரயத்தனம்

யுத்தம் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் யுத்தம் தொடர்பான சட்டங்களையும் மீறுவதாகும். இவ்வாறு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள `பிரயத்தனம்` மக்கள் இயக்கம் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கொழும்புக்குக் கிடைக்கும் தகவல்களின்படி முல்லைத்தீவுப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்களின் நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருகின்றன. போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கிடையிலான மோதல் காரணமாக மிகக் குறுகிய நிலப்பரப்பில் இந்தப் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கு அவர்கள் முயற்சி செய்வதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு வருமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருப்பதுடன் யுத்தமற்ற வலயத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. கூட்டுத் தலைமை நாடுகள் , உதவி வழங்கும் குழு ஐரோப்பிய சமூகம் இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் முழுவதும் சிவிலியன்களை விடுவிக்குமாறு விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் யுத்தம் பற்றிய சர்வதேசச் சட்டங்களும் சிவிலியன்களின் நடமாட்டச் சுதந்திரம் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விசேடமாக வலியுறுத்துகின்றன.

1977 ஆம் ஆண்டின் முதலாவது ஜெனீவா உடன்படிக்கையின் இணைப்பு இரண்டின்படி நடமாடலும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதும் பயணஞ் செய்வதும் ஒரு மனித உரிமை என்று கூறுகின்றது. அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் , நோயுற்ற மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதில் போற்றத்தக்க பணியை ஆற்றியுள்ளது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் இரண்டு கப்பல்களை வழங்கியிருக்கின்றது.

ஆயினும் விடுதலைப்புலிகள் இயக்கம் தனது பகுதிகளில் இருந்து சிவிலியன்களை வெளியேற அனுமதிப்பது பற்றி இன்னமும் எந்தவிதமான சாதகமான பதிலையும் தரவில்லை.

எனவே சிவிலியன்களைப் பாதுகாப்பான வலயங்களுக்குச் செல்ல அனுமதிப்பதன் மூலம் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டுமென்று பிரயத்தனம் மக்கள் இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது. இந்த சிக்கலான வேளையில் அது ஓரளவு விட்டுக்கொடுக்கும் தன்மையைக் காட்ட முடியும். அதேவேளை, பாதுகாப்பான பகுதிகளுக்கு வரும் பொதுமக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டுமெனவும் `பிரத்தனம் மக்கள்` இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.

இரண்டு தரப்புகளும் காலந்தாழ்த்தாமல் இந்த மனிதநேயப் பிரச்சினை குறித்து ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் எனவும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply