ஏமன் அரசின் தாக்குதலில் அல்- கொய்தா தீவிரவாதிகள் 7 பேர் பலி
புரட்சியில் ஈடுபட்டுள்ள அல்- கொய்தா தீவிரவாதிகள் மீது ஏமன் அரசு இன்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது. அப்யான் மாகாணத்தின் மாபெத் நகரின் எல்லையில் போராளிகளின் வாகனங்களை ஏமன் அரசின் இரண்டு ஆளில்லா விமானங்கள் தாக்கின. இந்தத் தாக்குதலில் அல்- கொய்தா தீவிரவாதிகள் என்று கருதப்பட்ட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அல்- கொய்தா இயக்கத்துடன் இணைந்த போராளிகள், காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக அதிபர் பதவியில் இருந்த அலி அப்துல்லா சலேக்கு எதிராக 2011-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்ததைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அல்- கொய்தா இயக்கம், ஏமனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.
ஜிஞ்சிபார், சார் போன்ற பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் ஒரு வருடம் வைத்திருந்த அல்-கொய்தா இயக்கத்தினர் கடந்த 2012-ம் ஆண்டில் ஏற்பட்ட போராட்டங்களின்போது, அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இருப்பினும், அந்தப் பகுதிகளின் அருகே உள்ள மாபெத் நகரில் அவர்களின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஏமனின் அராபியன் தீபகற்பத்தில் இயங்கும் அல்- கொய்தா இயக்கத்தினரே, தீவிரவாதிகள் அமைப்பில் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா கருதுகிறது.
ஜிகாதி தீவிரவாதிகளை அழிக்கும் விதமாக ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசு, அல்- கொய்தாவினருக்கு எதிராக ஏமன் அரசு நடத்தும் போராட்டத்தில் உதவும் விதமாகவும், அவற்றைப் பயன்படுத்துகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply