இரசாயனப் பொருட்களே கொழும்புத் துறைமுக தீ விபத்துக்கு காரணம்!
தவறான தகவல்களைக் குறிப்பிட்டு தருவிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் காரணமாகவே கொழும்புத் துறைமுக களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு முழுக்களஞ்சியமும் நாசமடைந்ததாக துறைமுக அதிகார சபை மேற்கொண்ட விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான நிறுவனத்துக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதோடு ஏற்பட்ட நஷ்டத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களஞ்சியம் செய்யப்பட்டிருந்த பொருட்கள் குறித்து தகவல் திரட்டுகையில் தாம் தருவித்த உண்மையான பொருள் குறித்து குறித்த கம்பனி தகவல் வழங்கியதாகவும் இரசாயனப் பொருளின் கடுமையான தாக்கம் காரணமாக தீ வேகமாக பரவியதோடு அணைக்க முடியாதளவு அதன் சுவாலை காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தீ விபத்தினால் 556 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளதோடு இதுவரை 461 நிறுவனங்களில் 131 நிறுவனங்கள் தமது பொருட்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளன. இவர்கள் தாம் இறக்குமதி செய்த பொரு ட்களை காப்புறுதி செய்துள்ள தோடு அவற்றின் பெறுமதி 211 மில்லி யன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தீ விபத்தையடுத்து கொழும்பு களஞ்சியம் தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொழும்பு களஞ்சியத்தை நவீன வசதிகளுடன் மீள நிர்மாணிக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொழும்பு துறைமுக களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தீ விபத்து தொடர்பில் எதிர்த்தரப்பு பொறுப்பற்ற தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றது.
கொழும்பு துறைமுக களஞ்சியத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றவே வேண்டுமென்று களஞ்சியத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது. ஏனென்றால், ஹம்பாந்தோட்டை துறைமுக முதலாம் கட்டப் பணிகளே இதுவரை நிறைவடைந்துள்ளன. இன்னும் அங்கு கொள்கலன்கள் ஏற்றி இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட வில்லை.
கொழும்பு துறைமுக களஞ்சியத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றும் தேவை எமக்கு கிடையாது. இது குறித்து நேரடி விவாதம் மேற்கொள்ள வருமாறு ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சவால் விடுகிறேன். தீ விபத்து தொடர்பில் மறைக்க எமக்கு எதுவும் இல்லை.
இதுவரை மேற்கொண்ட விசாரணைப்படி கொள்வனவு செய்யப்படும் பொருள் குறித்த தகவல்களை குறிப்பிடாது மறைத்து அபாயகரமான இரசாயனப் பொருட்களை ஒரு கம்பனி இறக்குமதி செய்துள்ளது. அவை சாதாரண பொருட்களுடன் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் என்ன என்று எமக்கு பரீட்சிக்க அதிகாரம் கிடையாது. சுங்கப்பிரிவே அவற்றை பரீட்சிக்கும்.
இரசாயனப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்க தனியான களஞ்சிய வசதிகள் செய்யப்படும். அவற்றை ஏற்றி இறக்க விசேட ஒழுங்குகள் செய்யப்படும். ஆனால் இவை அபாயகர இரசாயன பதார்த்தங்கள் என்பது விபத்து நடந்த பின்னரே தெரிய வந்தது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது. களஞ்சியத்தில் 32 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தே தீ பரவியுள்ளது. 8 ஆவது நிமிடத்தில் கமராக்கள் தீயில் உருகியுள்ளன. தீச்சுவாலையின் கடுமையினால் தீ வேகமாக பரவி முழுக்களஞ்சியத்தையும் கரியாக்கியது.
இந்த விபத்துக்குக் காரணமான கம்பனிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்த இடத்தில் இரசாயனப் பதார்த்தங்களுள்ள போத்தல்கள் சில காணப்பட்டன. திரவமும் இரசாயன துகள்களுமே கொண்டு வரப்பட்டுள்ளன.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கம்பனிகள் மீண்டும் அதே பொருட்களை தருவிக்கையில் கட்டணம் அறவிடாது சலுகை வழங்க திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதை தடுக்க விசேட திட்டங்கள் தயாரித்து முன்னெடுக்க உள்ளோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply