வவுனியா முகாம்களிலிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை உறவினர்களுடன் தங்க அனுமதி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடன் தங்குவதற்கு அனுமதித்திருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
 
வயதுவந்தவர்கள் ஏனையவர்களின் உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனவே அவர்களை முகாம்களுக்கு வெளியேவிருக்கும் உறவினர்களுடன் தங்குவதற்கு அனுமதிவழங்கியிருப்பதாகக் கூறினார்.

வயதுவந்தவர்கள் விரும்பினால் மாத்திரமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சார்ள்ஸ் குறிப்பிட்டார். எனினும், முகாம்களுக்கு வெளியே உறவிரகள் இல்லாத முதியவர்கள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் முதியோர் இல்லங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

“நாம் ஏற்கனவே 60 வயதானவர்களை வெளியேற அனுமதித்துள்ளோம். முகாம்களிலிருக்கும் மேலும் 73 பேரை அடையாளம் கண்டிருப்பதுடன், அவர்களை விரைவில் வெளியேற அனுமதிக்கவுள்ளோம்” என்றார் அவர்.

அத்துடன், இடம்பெயரும்போது குடும்பங்களைவிட்டுப் பிரிந்த சிறுவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டு, பின்னர் பெற்றாருடன் இணைத்துவைக்கப்படுவார்கள் என வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த 31,504 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதுடன், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் தமக்கான உணவுகளைச் சமைக்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்துக்கு அமைய 100 குடும்பங்கள் இணைந்து தமக்கான சமையலைச் செய்துகொள்வார்கள் எனவும், இன்று முதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன், சமையலுக்கான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பாத்திரங்கள், விறகு போன்றவற்றை அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply