இலங்கையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு
இலங்கையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் நடுவானில் திருப்பப்பட்டு மீண்டும் கொழும்பு சென்றது. பீதியில் பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 7.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 120 பயணிகளுடன் கொழும்பி லிருந்து திருச்சிக்கு புறப்பட்டது. காலை 8.30க்கு திருச்சிக்கு வந்து, பின்னர் 9.10 மணிக்கு மீண்டும் கொழும்பு புறப்படும்.
வங்காள விரிகுடா கடல் பரப்புக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்திய எல்லையில் திருச்சி வான் கட்டுப்பாட்டு பிரிவுக்கு அருகில் வந்தபோது, பைலட் திடீரென மீண்டும் இலங்கை நோக்கி விமானத்தை திருப்பினார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சில பயணிகள் பீதியில் அலறினர். அவர்களை விமானப் பணியாளர்கள் சமாதானப்படுத்தினர். விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது. அப்போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் இலங்கை திரும்ப நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர், ஒரு மணி நேரம் தாமதமாக மாற்று விமானம் மூலம் பயணிகள் திருச்சி வந்தனர். இதற்கிடையே இலங்கை செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், விமானம் வராததால் ஏமாற்றமடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply