விசேட சட்டமூலம் குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் வாக்குரிமை சட்டமூலத்தைப்பற்றிய மேலதிக விபரங்களை தரவேண்டுமென கோரியுள்ள எதிர்க்கட்சிகள் அது தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்தன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கமறுத்த அரசாங்கம் இந்த சட்டமூலம் அவசர சட்டமூலமென்பதனால் அதற்கு அவசியமில்லை என்று அரசாங்கம் நேற்று சபையில் பதிலளித்தது.
இடம்பெயர்ந்தோர் வாக்குரிமை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சமர்ப்பித்த போதே எதிர்க்கட்சிகள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தன.
முன்னதாக பேசிய ஜனநாய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, இந்த சட்டமூலத்தின் பிரதிகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. சட்டமூலங்கள் சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமூலங்களின் பிரதிகள் உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்படும்.
அப்படியிருக்கையில், அவசர சட்டமூலம் என்று அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த சட்டமூலத்தின் பிரதிகள் ஏன் இன்னும் தங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் அவர் வினவினார்.
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இந்த சட்டமூலத்தில் உள்ள பல விடயங்கள் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவுப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது என்பதனால் அதற்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதே கருத்தையே வலியுறுத்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு இசைவாக உள்ளதாக இருப்பினும், அவசியமான சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த சபைமுதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா, இது முக்கியமானதும் அவசரமானதுமான சட்டமூலம் என்பதனால் ஆலோசனைக்குழு கூட்டத்தை நடத்தவேண்டிய அவசியமில்லையென்றும், விவாதத்தின் போது தேர்தல்கள் ஆணையாளர் மூலம் தேவையான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply