விடுதலைப்புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது.சர்வதேச சட்டங்கள் மற்றும் போர் தொடர்பிலான சட்டங்களை இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக போர்நிறுத்தம் ஒன்றையும் கோரியிருக்கிறது.
விடுதலைப்புலிகள் மோதல் நடக்கும் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருப்போரைப் பார்க்க வருபவர்களைக் கண்காணித்து அனுமதிக்கும் முறை சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் , அங்கு சுயாதினமான கண்காணிப்பு அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஐ.நா. செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற மனித நேய அமைப்ப்புகள் அந்த முகாம்களுக்கு வர முழு அனுமதி தரப்படவேண்டும் என்றும் அது கோருகிறது.
இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒன்றியம், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவது என்பது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே அமையும் என்று கூறியிருக்கிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முடிவாகத் துறந்து, சிறார்களை படையணியில் சேர்ப்பதை நிறுத்தி, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வை அடைய ஒரு அரசியல் வழிமுறையில் பங்கேற்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply