மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

இலங்கையில் தொடரும் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்து இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் மீண்டுமொருமுறை கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டுமென அவை தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மேலும் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொடுக்காமலும், இலங்கையிலுள்ள இனங்களை அழிக்காமல் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என மூன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மோதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துச் செல்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலையடைவதாகக் குறிப்பிட்டிருக்கும் பான்கீ மூன், மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்படுவதற்குத் தமது பலமான ஆதரவு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

எனினும், போர்நிறுத்தமொன்ற வார்த்தையை ஐ.நா. செயலாளர் நாயகம் பயன்படுத்தவில்லையென ரொய்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் வடபகுதியில் நடைபெறும் மோதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

“அரசியல் ரீதியான திட்டமொன்றிருந்தாலே நாட்டிலுள்ள பலதரப்பட்ட தரப்புக்களினதும் கேள்விகளுக்கு விடைகாணமுடியும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட் கூறியுள்ளார்.

மோதல்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதையே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், மனிதநேய நிலைமைகள் குறித்து அக்கறையுடன் இருப்பதால் அந்த விடயத்தில் உதவிகளைச் செய்யமுடியும் எனக் கூறியுள்ளார்.

“மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம். ஆனால் இறுதியில் மோதல்கள் ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் போன்ற விடயங்களை இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” என வூட் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply