சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு புலிகள் தெளிவாக பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் சமரசிங்க
பொது மக்களை தமது பிடியில் இருந்து விடுவிப்பதாக புலிகள் ஒரு தெளிவான அறிவிப்பைச் செய்வார்களாயின் அதற்காக அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயாரென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்கமும், சர்வதேச சமூகமும் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து புலிகள் ஒரு தெளிவான பதிலை அறிவித்தால், பொதுமக்கள் எவ்வகையிலும் பாதிப்படையாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இருதரப்பும் மோதல்களை இடைநிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கைவிடுமாறும் அறிக்கையொன்றின் மூலம் இயக்கத்தைக் கோரியுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரமசிங்க, இந்தத் தருணத்திலாவது புலிகள் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புலிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் பிடித்த பிடியாய்த் பொதுமக்களைத் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது படையினர் புதுக்குடியிருப்பை நெருங்கிவிட்டார்கள். அதனால், பொதுமக்கள் இனி வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்கள் வெளியேறினாலும் புலிகள் இயக்கத்தினரை எதிர்கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அவ்வாறான நிலைமையில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாம் மோதல்களை இடைநிறுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். புலிகள் அமைப்பு இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியுயோர்க்கில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அவர் :-
‘ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் மிகச் சிறப்பான ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனைத் தவிர்ப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற விடுவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மோதலை இடைநிறுத்த வேண்டும்.
இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் மிக அத்தியாவசியமானது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அரசியல் பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் பங்காற்ற வேண்டுமென்றும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply