மேல் மாகாண சபைக்கு ஏப்ரல் 25ல் தேர்தல்; 38 கட்சிகள்,23 சுயேச்சைகள் போட்டி; 2378 வேட்பாளர்கள் களத்தில்

மேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 2378 பேர் போட்டியிடுகின்றனர்.இம்முறை தேர்தலில் 38 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி அடங்லாக 17 கட்சிகளும் 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 11 கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 10 கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 07 கட்சிகள் 6 சுயேச்சை குழு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கொழும்பு பதில் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளினதும் எம். அன்பழகன், பி. பன்னீர்ச் செல்வன், விஜே குணவர்த்தன தலைமையிலான சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் 3 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளினது வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதிலே 2 அரசியல் கட்சிகளதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பூமிபுத்ர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ. தே. க. (ஜனநாயகக் குழு), கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக சுனில் ஜெயமினியும் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் களுத்துறை மாவட்ட முதன்மை வேட்பாளராக ரெஜினோல்ட் கூரேயும் போட்டியிடுகின்றனர். ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் அபே குணவர்த்தன போட்டியிடுவதோடு ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக துமிந்த தாககமுவவும் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளராக அப்துல் ஹையும் போட்டியிடுகின்றனர்.

இது தவிர, ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் அஜ்மல் மெளஜுட், எம். எச். மன்ஸில், நவுஸர் பெளசி, வசந்தா ரோஹினி தேவி, கே. ரி. குருசாமி, செல்லசாமி திருக்கேஷ்வரன், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐ. தே. க. சார்பாக 5 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் போட்டியிடுகின்றனர். சாஹுல் ஹமீட், எம். எஸ். எம். பைரூஸ், அப்துர் ரஹுமான் முஹம்மது முயீஸ், ஏ. ஜே. எம். முஸம்மில், துஆன் ஆமித், கிருஷாந்தா யோகதாஸ், குமர குருபரன் ஆகியவர்களே போட்டியிடுபவர்களாவர்.

களுத்துறை மாவட்டத்தில் எம். எம். எம். அம்ஜாத், அம்ராஸ் மஜீத், தங்கராஜா ஜயராஜ் ஆகிய சிறுபான்மையி னரும் கம்பஹா மாவட்டத்தில் சலீம் முஹம்மது சதாவுல்லா, கே. புஷ்பராஜ் ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக கித்சிறி கஹடபிடியவும், ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக டாக்டர் நZன் ஜெயதிஸ்ஸவும், மு. கா. சார்பாக எம். அஸ்லமும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக மாதிவலயும் ஜே. வி. பி. சார்பாக வருணா தீப்தி ராஜபக்ஷவும் மு. கா. சார்பாக சாபி ரஹீமும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்

ஐ. ம. சு. முன்னணி சார்பாக இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. கட்சி இது குறித்து பின்னர் முடிவு செய்யும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். ஐ. தே. க. வும் இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. கூடுதல் விருப்பு வாக்கு பெறுபவர் முதலமைச்சராக நிய மிக்கப்படுவாரென ஐ. தே. க. கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply